Friday, 18 September 2009

கவுண்டமணி


நேற்று இரவு சன் டிவியில் ஆயுத பூஜை படத்தில் கவுண்டமணி காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படி வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் சிரிப்பு வர வைக்கிறதோ அதே போல் தான் கவுண்டமணியும். மிகச் சிறந்த நடிகர். அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடிக்கும் அற்புதமான கலைஞன்.கொஞ்ச நேரம் அவர் நடித்த மற்ற காமெடி காட்சிகளை நினைத்துக்கொண்டு இருந்தேன்.ஒரு படத்தில் ரோட்டில் சாட்டையால் அடித்துக்கொள்ளும் கேரக்டர் செய்திருப்பார்.இன்னொரு படத்தில் அவர் மேல் கடுப்பில் இருக்கும் யாரோ ஒருவர் இவர் கோவிந்தா கோவிந்தா என்று உருண்டு பிச்சை எடுத்துக்கொண்டு வரும் ரோட்டில் நெறிஞ்சி முல்லை போட்டு விடுவார்கள். கவுண்டர் நடிப்பை பார்க்கவேண்டும். சும்மா பின்னி எடுத்திருப்பார்.(ஆமாம், முன்னெல்லாம் இது போல புரட்டாசி மாதத்தில் வருவார்கள். இப்போதெல்லாம் ரோட்டில் கோவிந்தா போட்டுக்கொண்டு உருண்டு வருபவர்களை பார்ப்பதே இல்லை. அது சரி, இப்போ இருக்கிற சென்னை போக்குவரத்தில் கோவிந்தா போட்டுக்கொண்டு வந்தால் நிஜமாகவே கோவிந்தா தான்).

அதே போல் ஒரு படத்தில் இவர் பாட்டை ஊரில் அனைவரும் கேட்க வேண்டும் என்று நடு நிசியில் ஒவ்வொரு வீடாக சென்று எழுப்பி "நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே?" என்று பாடி உயிரெடுத்து விடுவார்.இதை தவிர வடக்குபட்டி ராமசாமி காமெடி(படம் உத்தமராசா என்று நினைக்கிறேன்),ஆல் இன் ஆல் அழகுராஜா(வைதேகி காத்திருந்தாள்), நடிகன், பிரம்மா, மாமன் மகள்,சூரியன்,சேரன் பாண்டியன்,நாட்டாமை,உதய கீதம்,உள்ளத்தை அள்ளித்தா,மன்னன்,கோவில் காளை(இதில் வடிவேலு கவுண்டரிடம் நாயடி வாங்குவார்) என்று கவுண்டர் தமிழர்களை நிறைய சிரிக்க வைத்தார்.

முதல் முறை ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் வாங்கிய காமெடி நடிகர் கவுண்டமணி தான்.எத்தனையோ நடிகர்கள் இவருக்காக காத்திருந்து நடித்து கொடுத்ததுண்டு.அப்போது நிறைய பத்திரிக்கைகள் கவுண்டர் மிகவும் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் எழுதின.கவுண்டர் சொன்னார், "இப்போ தான் நான் வாங்குற காசு இவங்களுக்கு பெரிசா தெரியுது. ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம நானும் என் நண்பர் பீலிசிவமும் ஒரு நாளைக்கு ஆறு கிலோமீட்டர் நடந்து வந்து வாய்ப்பு கேட்போம். இவங்களுக்கு அந்த கவுண்டமணியை தெரியாது என்றார்".அதே போல், அவர் நடித்த காலத்தில் எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளவில்லை.கவுண்டமணி செந்தில் இல்லாமல் சோலோ காமெடி செய்வார் ஆனால் செந்தில் சோலோ காமெடி செய்து பார்த்ததில்லை.

ஒரு படத்தில் லாட்டரி சீட்டில் பரிசு விழுந்து விட்டது என்று செந்தில் கூற கவுண்டர் செம்ம ரவுசு விடுவார். அதே போல் கப்பலில் வேலை(சேதுபதி IPS) என்று சொல்லி கவுண்டரை வேலையை விட செய்து விடுவார் செந்தில். திரும்ப அதே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஆகிவிடும் கவுண்டருக்கு. ஒரு பம்மு பம்முவார் பாருங்கள். அசாத்தியமான நடிப்பு.

கவுண்டமணி சத்தியராஜ் ஜோடி சில நல்ல நகைச்சுவை படங்களை தந்தது. நடிகன், பிரம்மா, மாமன் மகள் போன்றவை உதாரணங்கள். இப்போதும் பிரம்மா படத்தில் குஷ்புவை பார்க்க விடுதிக்கு செல்லும் கவுண்டரையும் சத்தியராஜையும் அங்குள்ள காவலாளி கேள்வி கேட்க கவுண்டர் பண்ணும் ரவுசில் சத்தியராஜ் அந்த காட்சி முடிவில் திரும்பி சிரித்துக்கொண்டே செல்வதை நீங்கள் பார்க்கலாம். முகத்துக்கு எதனை அருகில் கேமரா இருந்தாலும் கவுண்டர் அலட்டிகொள்ளாமல் நடிப்பார். சில நடிகர்களுக்கு இது மிகக் கடினம்.

கவுண்டரின் முதல் படம் அன்னக்கிளி என்று நினைக்கிறேன். வெளிவந்த வருடம் 1976. கிட்டத்தட்ட பத்து படங்களில் கதாநாயகனாக நடித்தார். எஸ்.வி.சேகரை தவிர கதாநாயகனாக நடித்த ஒரே நகைச்சுவை நடிகர் கவுண்டர் தான் என்று நினைக்கிறேன். இவ்வளவு திறமையுள்ள கவுண்டரை கடைசியில் சிம்புவெல்லாம் நக்கல் செய்கிற நிலை ஏற்பட்டது. ஆனால், கவுண்டர் வாயை திறந்து எதுவும் சொல்லவே இல்லை. அமைதியாகவே இருந்தார்.இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் படத்தில் நடிக்கிறார் என்று செய்தி.கவுண்டரே, இன்னொரு ரவுண்டு வாருங்கள். வந்து தமிழ் சினிமாவை கலக்குங்கள்.

5 comments:

Jawarlal said...

சத்யராஜ் காம்பினேஷன் அவருக்கு ரொம்ப ராசி. ராசி மட்டுமில்லை, ரெண்டு பெரும் போட்டி போட்டுக் கொண்டு காமெடி பண்ணுவார்கள். சிறந்த உதாரணம், மாமன் மகள்.

http://kgjawarlal.wordpress.com

Gokul said...

வாசு,

கவுண்டரின் முதல் படம் 16 வயதினிலே என்று நினைவு.

Vasu. said...

ஜவகர்,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வருகைக்கு நன்றி.

Vasu. said...

சரியாக தெரியவில்லை கோகுல்.

Zahoor said...

கவுண்டரை பற்றி இன்னொரு சிறப்பான விஷயம், எண்ணற்ற மிமிக்ரி கலைஞர்கள் இருந்தாலும் கவுண்டரை இதுவரை யாரும் தத்துருபமாக மிமிக்ரி செய்தது இல்லை. பலர் முயற்சித்து இருந்தாலும் அவை நன்றாக இருந்தது இல்லை. கவுண்டர் கவுண்டர் தான்.